மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு 

0
41
Dharmaraja Draupadi Amman Temple in Villupuram
Dharmaraja Draupadi Amman Temple in Villupuram

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு

அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பொது கோயில்கள் தவிர, குறிப்பிட்ட பாலினர், சமூகங்கள், மரபினர் மற்றும் குடும்பங்களுக்கென கோயில்கள் இருக்கின்றன. அப்படி ஒரு கோயில் தான் விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில். அது, வன்னிய சமூகத்தில் ஒரு சில குடும்பத்தாரின் குலதெய்வ கோயில். அந்த கோயிலில் உள்ள தெய்வங்களை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே அங்கு வழிபடலாம். வேறு யாருக்கும் அனுமதி இல்லை. பிற சமூகங்கள் என்ன, குலதெய்வ கோயிலாக ஏற்றுக்கொள்ளாத பிற வன்னியர்களுக்கே அங்கு அனுமதி கிடையாது!

குடும்ப கோயில்

அதாவது, முன்னொரு காலத்தில், ஒரு சில வன்னிய குடும்பங்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கோயில் அமைத்துக்கொண்டனர். அந்த குடும்பங்கள் சார்ந்தவர்கள் மட்டுமே அங்கு வழிபட முடியும். அங்கு, வேறு யாரையும் வழிபட அனமதிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. ஏனெனில் அந்த கோயில் ஒரு தனியார் சொத்து. 

உங்கள் வீட்டு பூஜை அறையில், வழிபட வேண்டும் என்று பக்கத்துவீட்டுக்காரர் வலுக்கட்டாயமாக நடந்துகொண்டால் நீங்கள் அனுமதிப்பீர்களா? அது போலத்தான் இதுவும்.அந்த கோயில், அறநிலை துறை கோவில் என்று கூறுவது உண்மை கிடையாது. ஏனெனில், அறநிலைய துறை செய்த தக்கார் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.

அந்த மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நோட்டீசும் அனுப்பாமல், அறநிலைய துறையாக முடிவெடுத்து, கோவிலை தங்கள் அட்டவணையில் சேர்த்து ஒரு எண் வழங்கி விட்டால், அக்கோவில் அறநிலைய துறை சொத்தாகி விடாது.

தனியார் நிலம்

இந்த கோவில் உள்ள இடம், 1905ல் இருந்து தெளிவாக ஆவணங்களை உடைய தனியார் நிலம். அந்த கோவிலை கட்டியது தனியார். அது ஒரு சில குடும்பங்களுக்கான பூஜை அறை போன்றது. அதில் தலையிட அறநிலைய துறைக்கு எந்த உரிமையும் இல்லை. இது, மேல்பாதியில் உள்ள எல்லோருக்கும் தெரியும். அதனால், இதுநாள் வரை எந்த பிரச்னையும் இல்லை.  

மேல்பாதி கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பத்தினர், பெரும் பொருட்செலவில் திருவிழா நடத்தினர். அதற்கு பின்தான், ஹிந்து அறநிலையத் துறை கண்களுக்கு, மேல்பாதி கோவில் உறுத்த ஆரம்பித்தது. இது தான் தற்போதைய பிரச்னைக்கு மூல காரணம். 

குலதெய்வ வழிபாடுகளை அழிக்கும் திமுக 

தி.மு.க., அரசு, இது மாதிரியான சமூகங்களின் குலதெய்வ வழிபாடுகளை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. அதனால் தான், இப்படி ஒரு பிரச்னையை கிளப்பிவிட்டுள்ளது. 

இப்படித்தான், கடலூர் மாவட்டம், மூலகுப்பம் கிராமத்தில் விநாயகர் மற்றும் தர்மராஜா கோவில், பல ஆண்டுகளாக ஓட்டு கட்டடத்தில் இருந்து வந்தது. 

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, கோடி ரூபாய் செலவு செய்து, ஸ்திரமான கோவிலாக புதுப்பித்தனர். ஓட்டு கட்டடத்தில் இருந்தவரை, அங்கு வராத அறநிலையத்துறை கோடி ரூபாய் செலவு செய்து கோவில் புதுப்பிக்கப்பட்டவுடன், ஓடோடி வந்து கோவிலை அபகரித்து கொண்டது. 

அங்கிருந்த பரம்பரை பூசாரிகள் அகற்றப்பட்டனர். பின், வேறொரு பூசாரியை அறநிலைய துறை நியமித்தது. ஆனால், சம்பளம் கொடுக்காததால் ஏற்பட்ட கோபத்தில், அந்த பூசாரி, கோவிலை பூட்டி சாவி எடுத்து சென்று விட்டார். இப்போது பூஜை இல்லாமல், அந்த கோவிலும் பூட்டிக் கிடக்கிறது.

இப்படி, ஆயிரக்கணக்கான உள்ளூர் கோயில்களை அறநிலைய துறை அழித்து வருகிறது. நோக்கம் என்ன? ஹிந்துக்களின் வழிபாட்டை அழிக்க வேண்டும். 

மதச்சார்பின்மை எங்கே?

மேல்பாதி விவகாரம் இரு ஜாதிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது என்பதை கேள்வி பட்டதும், அங்கு சென்றேன். 

அந்த கிராமத்தின் பட்டியல் சமூக மக்களையும், வன்னியர் மக்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினேன். பின், ஒரு சமாதான குழு அமைத்தேன். 

கிராமத்துக்குள் இயல்பு நிலை திரும்புவதற்கான முறையான வழிகாட்டுதல்களோடு அந்த சமாதான குழு அளித்த அறிக்கையுடன் விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து, அறிக்கை அளித்து, விபரங்களை கூறினேன். 

கலெக்டரும், கிராமத்தின் உண்மையான சூழலை புரிந்து கொண்டார். நல்ல முடிவு எட்டப்படும் என காத்திருந்தோம். சில காலம் கடந்திருந்தாலே அந்த கிராமத்தில் சமூக நிலை திரும்பி இருக்கும். ஆனால் , கோவிலை பூட்டி சீல்  வைத்தது மாநில அரசு.  

இது நடந்து 45 நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது. கோவில் பூஜைகள் முழுமையாக நடக்கவில்லை. 

சில ஆண்டுகளுக்கு முன், எறையூர் கிராமத்தில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடந்து, இருவர் இறந்தனர். இருந்த போதும், அந்த, ‘சர்ச்’ ஒரு நிமிடம் கூட மூடப்படவில்லை 

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில், மசூதியில் இரு தரப்பினருக்கிடையே பிரச்னை எழுந்தது அந்த சமயத்தில் மசூதி மூடப்படவில்லை. 

ஆனால், ஹிந்து கோவில்களில் பிரச்னை என்றால், உடனே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கோவிலை மூடி சீல் வைக்கின்றனர். பின், அங்கிருக்கும் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது, மதச்சார்பற்ற தேசத்தில் தான் வாழ்கிறோமா என்ற கேள்வியும், அச்சமும் ஹிந்துக்களுக்கு எழுகிறது. 

  • அஸ்வத்தாமன், பாஜக மாநில செயலாளர்