மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன்  காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது இரண்டு கார்களில் வந்த கொள்ளையர்கள் சுஷாந்தின் காரை மறித்து அவரை தாக்கி அவர் மீது மிளகாய் பொடியை தூவியுள்ளனர். மேலும் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடுவதற்கும் முயற்சித்துள்ளனர்.

அப்போது அந்த பக்கமாக ஒரு ஆம்னி பஸ் வந்தது. அதிலிருந்த டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து கொள்ளையர்களை விரட்ட முயற்சித்தனர். இதனால் பதற்றம் அடைந்த கொள்ளையர்கள் சுஷாந்தை அவர்கள் வந்த காரில் தூக்கி போட்டுக் கொண்டு, அவரது காரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். சிறிது தூரம் தாண்டி வந்த பிறகு சுஷாந்தை அங்கேயே இறக்கி விட்டு விட்டு அந்த கொள்ளையர்கள் நாகர்கோவில் செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றனர்.

நாங்குநேரி சுங்கசாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் மாட்டி விடக் கூடாது என்பதற்காக, அதற்கு முன்பாக உள்ள நெடுங்குளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள குளத்திற்கு அருகில் சுஷாந்தின் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓடி விட்டனர். இதை பற்றி அங்குள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சுஷாந்த் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்த பிறகுதான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் சுஷாந்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பணத்தை பற்றி சுஷாந்த் சரியான தகவல்களை கூறாததால் அது கருப்பு பணமாகவும் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.