தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

0
160
Edappadi Palanisamy with TTV Dhinakaran
Edappadi Palanisamy with TTV Dhinakaran

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சூசகமாக சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் அந்த சூசகமான பேச்சுக்கு காரணம். நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது.

நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அவர் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று பேசியுள்ளார் . இதை தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் பேச்சால் விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்பதை சுட்டிக்காட்டி பேசினாரா என்பது அவருக்கு தான் தெரியும்.அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் பலரும் இதை கூறி வந்த நிலையில் தற்போது  இவரும் அதையே குறிப்பிட்டு பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi Palaniswami Property List
Edappadi Palaniswami Property List

இதுமட்டுமல்லாமல் நேற்று நடந்த கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதும் கவனம் பெற்று வருகிறது. வழக்கமாக எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என மெகா கூட்டணியை திமுக தான் அமைக்கும். அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்காக தான் போட்டியிடும் இடங்களைக் கூட பல நேரங்களில் குறைத்துக்கொண்டு திமுக மெகா கூட்டணிகளை அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக திமுகவின் வாக்குவங்கியை விட அதிமுகவின் வாக்குவங்கி ஓரிரு சதவீதம் அதிகம் என்பதே உண்மை. அந்தவகையில் கடந்த காலங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி கூட்டணியில் சில கட்சிகள் இடம்பெற்ற போதும் கூட அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பது என்பது ஜெயலலிதாவின் பாணியாக இருந்திருக்கிறது. ஆனால் ஓபிஎஸ், சசிகலா என ஆளுக்கொரு பக்கம் சென்ற நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி அடிவாங்கி விட்டதை அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் அதை உறுதிபடுத்துகிறாரா என்றும் கேள்விகள் எழுகின்றன.

ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமோக வெற்றி பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக அமைத்த மெகா கூட்டணி பெரிதும் உதவியது என்பதே உண்மை. மேலும் ஸ்டாலினின் எழுச்சியும், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களும் அதிமுகவின் வாக்குவங்கியை பதம் பார்த்துவிட்டதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Edappadi Palanisamy with TTV Dhinakaran
Edappadi Palanisamy with TTV Dhinakaran

அதனாலே தற்போது ஆளும் திமுகவை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமியை தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மெகா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேமுதிக இறுதி நேரத்தில் கழட்டிவிடப்பட்டு பின்னர் அது அமமுகவுடன் ஐக்கியமானது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எடுத்து பார்த்தால் வட மாவட்டங்களில் பெற்ற வெற்றியை போல தென் மாவட்டங்களில் பெற முடியவில்லை. இதற்கு காரணமாக வன்னியர்களுக்கு அளித்த 10.5 உள் ஒதுக்கீடும், இதை அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் போன்றவர்களே எதிர்மறையாக பிரச்சாரம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அதிமுகவின் வெற்றி பல இடங்களில் தடுக்கப்பட்டது அமமுகவால் தான் என்றும் சிலர் கூறுகின்றனர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் பலவற்றில் அமமுக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.

Edappadi Palanisamy with TTV Dhinakaran
Edappadi Palanisamy with TTV Dhinakaran

அந்த வகையில் அமமுகவை கூட்டணியில் இணைக்கலாம் என அமித் ஷா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் கூறியதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. தற்போது ஓபிஎஸ் வேண்டாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாகஇருக்கிறார். இந்நிலையில் தான் கூட்டணி என்ற அடிப்படையில் தினகரனோடு கைகோர்க்கவும் எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டதாக சொல்கிறார்கள். இதற்கு தினகரனும் பச்சைகொடி காட்டிவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிமுகவுக்கு உரிமைகோரும் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி விடலாம் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.