அந்த போட்டியில் நான் சச்சினுடன் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்! விராட் கோலி ஓபன் டாக்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் விளையாடிய போட்டிகள் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி ருசிகரமான பதிலை கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக கோலி பேசியபோது, சச்சின் குறித்து தன்னுடைய அபிமானத்தை தெரிவித்தார். இதில் கேள்வி ஒன்றுக்கு கோலி பதில் அளித்தது சுவாரஸ்யமாக இருந்துள்ளது.
நான் இந்த போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த போட்டி எது என்ற கேள்விக்கு, 1998 ஆம் ஆண்டு கோக கோலா கப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி என்று கோலி கூறினார்.

உடனே, இறுதி போட்டியா.? அல்லது அதற்கு முந்தைய போட்டியா என்று சுனில் சேத்ரி இடையில் கேள்வியெழுப்ப, நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போட்டி என்று கோலி பதிலளித்தார். மேலும் அந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் சரசரவென விக்கெட்டுகளை இழக்க தெண்டுல்கர் மட்டும் தனியாக 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார்.

இந்த சுவாரஸ்யமான போட்டியில் இந்திய அணி தோற்றாலும், இதற்கு பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக்கனியை இந்தியா சுவைத்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் விருப்பமான கிரிக்கெட் பதில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.