சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு

0
63
Justice M Duraiswamy
Justice M Duraiswamy

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா நேற்று உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ஜனாதிபதி புதிய தலைமை நீதிபதியை இதுவரை நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை கவனிக்க உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அவர்களின் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து. ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

அந்தவகையில் ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியானது தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து, இதுவரை தலைமை நீதிபதி விசாரித்து வந்த பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை, உயர்நீதிமன்ற முதல் அமர்வில் அமர்ந்து சக நீதிபதியுடன் சேர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி விசாரிப்பார்.