சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்

0
151
Naam Thamizhar Party Seeman condemn to BJP-News4 Tamil Online Tamil News Channel
Naam Thamizhar Party Seeman condemn to BJP-News4 Tamil Online Tamil News Channel

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்

சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் செய்யாது ஒருமையில் விளிப்பதும், தனிப்பட்ட முறையில் ஆபாசமாகப் பேசுவதும், அவதூறு பரப்புவதும், தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவைச் சனநாயகத்தைக் கொலைசெய்யும் பாசிச நடவடிக்கைகளாகும்.

தம்பி பியூஸ் மனுஷின் குடும்பத்தினர் குறித்துத் தொடர்ச்சியாகப் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதற்கு முடிவுகட்டும் விதமாகவும், பாஜகவின் நிர்வாகிகளோடு சித்தாந்த ரீதியாகவும், ஆட்சிமுறை குறித்தும் தர்க்கம் செய்யவே அவர் பாஜகவின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். பாஜக அலுவலகத்திற்குள் அவர் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. சேலம் பாஜகவின் அலுவலகத்திற்குள் சென்ற பியூஸ் மனுஷ் பாஜக நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார்.

ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசவும், மிரட்டவும் தொடங்கவே தனது வாதத்தை முடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறார். அத்துடன் அவரது முகநூல் நேரலையையும் நிறுத்துகிறார். அதன்பிறகே அவர் மீது பாஜகவின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இவை மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் அரசியல் அநாகரீகமாகும். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின்படி வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleகுடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி
Next articleதிமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்