உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!  

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2-வது  இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.  இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைக்குமா?  என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர். எனவே வீரர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கூறுகையில்,

லண்டனில் உள்ள சீதோஷ்ண நிலை  பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் அளிக்க கூடியதாகும். எனவே பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். மிகவும் சவாலான இங்கு அவசரப்படாமல் நிதானமாக நிலைத்து நின்று விளையாடினால்தான் ரன் சேர்க்க முடியும். அதற்கு நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியமாகும். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

மேலும் களத்தில் நிலையாக நிறுத்தி விளையாடும் பொழுது பந்தினை அடித்து நொறுக்கி விளையாட வேண்டும் என தோன்றும்.  ஆனால் அதற்கு முன்னால் நமது பலம் என்ன என்பதை சிந்தித்து  அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இங்கு விளையாடிய வீரர்களின் ஆட்ட முறையை பார்த்துள்ளேன். ஆனால் அவர்களை பின்பற்றி விளையாட போவதில்லை. எனது ஸ்டைலில் விளையாடப் போகிறேன். அதற்காக அவர்கள் ரன் குவித்த விதத்தை தெரிந்து வைத்துள்ளேன்.

லண்டனில் உள்ள ஓவல் பேட்டிங் ஆடுகளத்தில் சிறந்த ஒன்று. மேலும் இங்கு பவுண்டரி தூரம் குறைவு என்பதால் நிலைத்து நின்று விளையாடினால் நிறைய ரன்கள் சேர்க்க முடியும். எனவே நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினால் கட்டாயம் சாதிக்கலாம் அதற்கு கவனம் தேவை.

20 ஓவர் போட்டிகளில் இருந்து டெஸ்ட் போட்டிகளுக்கு மாறுவது என்பது சவாலானது. நீங்கள் பலவிதமான போட்டிகளில் விளையாடி வருகின்றீர்.  எனவே மனதளவில் அதற்காக  தகவமைத்து கொள்வதோடு மட்டுமில்லாமல் தொழில்நுட்பத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். மனரீதியாகவும் தயாராக வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த  3-4 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துள்ளோம். அந்த நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு அளித்து போட்டியில் வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

இந்திய வீரர்களில் புஜாரா தவிர மற்ற அனைவரும் ஐபிஎல் சீசனில் விளையாடியவர்கள். அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், கேமரூன் கிரீன் ஆகியோர் ஐபிஎல் சீசனில் விளையாடியவர்கள். ஸ்டீபன் சுமித், லபுசேன் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினர். இதனால் பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தது.

இது பற்றி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில்,

இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. நாங்கள் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில்  (டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடர்) விளையாட வேண்டி இருக்கிறது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளேன். அதனால் மிகையான போட்டிகளை விட குறைவான போட்டிகளில் விளையாடிவிட்டு வந்திருப்பது கொஞ்சம் நல்லது என்றே நினைக்கிறேன். பந்து வீச்சாளர்களின் பார்வையில் இதை சொல்கிறேன். உடல்ரீதியாக புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டு தாயகம் திரும்பியதும் நாங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டோம். புத்துணர்ச்சியுடன் போட்டியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.