ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் தனது பணிக்கு இடையே கண்ணாடி முன்பு நின்று ஷேவிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதிகள் இருப்பினும் இரவு, பகலாக பாடுபடும் இவர்களின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களுடன் அவசர ஆம்புலன்ஸ் ஊழியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நோயாளி ஒருவரை மயானத்தில் இறக்கிவைத்துவிட்டு பாதுகாப்பு உடையுடன் வாகன கண்ணாடியில் முகச்சவரம் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தபடத்தின் மூலம் அவர்களின் ஓய்வில்லா உழைப்பு உலகத்தினர் முன்பு மீண்டும் வெளியாகியுள்ளது. இதனை பலரும் வாழ்த்துவதோடு அவர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் மிகத் தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் நோயாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.