புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக பலி!!

புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிகண்டன் (41). இவரது மனைவி ஷீலா (34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் (6). அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முடித்துள்ளான்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான், இதனிடையே காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் தனது மகனை காணவில்லை என மணிகண்டன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் வீட்டின் அருகே உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் தரை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஜஷ்வந்த் விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.