பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !

பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி வரும் நிலையில் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை என பூம்ரா தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதத்தால் இந்தியா 242 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லாதம் 52 ரன்களும் ஜேமிசன் 49 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

ஆனால் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களைத் தாரை வார்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 90 ரன்களை சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள பூம்ரா ‘நாங்கள் எங்கள் பேட்ஸ்மேன்களின் பழி சுமத்த விரும்பவில்லை. இது எங்கள் அணியின் பழக்கம். சில நேரம் எங்களால் (பவுலர்களால்) விக்கெட் வீழ்த்த முடியாமல் போகும் போது அவர்களால் சுதந்திரமாக பேட் செய்ய முடியாது.  எங்களுடைய இரண்டு பேட்ஸ்மேன்கள் (விஹாரி, ரிஷப் பண்ட்) இன்னும் களத்தில் உள்ளனர். நாளை சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்ப முயற்சிப்போம். எதிர்பார்த்ததை விட அதிக விக்கெட்களை இழந்துவிட்டோம். இருந்தாலும் குறைகூறும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.