நான் விஜய்யுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்.. நடிகர் அஜித்!

0
55
#image_title

நான் விஜய்யுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்.. நடிகர் அஜித்!

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகர்கள் என்னதான் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை அவர்கள் போட்டியாளர்களாக தான் கருதப்படுகிறார்கள். ரசிகர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் எம்ஜிஆர் என்று முழங்கும் கூட்டம் ஒன்று இருந்தால், சிவாஜி என்று முழங்கும் மற்றொரு கூட்டம் இருக்கிறது. அதுபோலத்தான் ரஜினி – கமல், அஜித் – விஜய்.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் எம் ஜி ஆரும் சிவாஜியும் நல்ல நண்பர்கள். ரஜினியும் கமல்ஹாசனும் அப்படித்தான். ஒரு மேடையில் கமல்ஹாசன் , ‘இதுக்கு முன்னாடி உள்ள தலைமுறையில் என்னையும் ரஜினியையும் மாதிரியான நண்பர்கள் இருந்தது கிடையாது’ என்று கூறியிருக்கிறார். இப்படிதான் சினிமாவில் நடிக்கின்றவர்கள் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.

அந்த காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி இருவரும் இணைந்து கூண்டுக்கிளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதுபோல ரஜினி – கமல் இணைந்து மூன்று முடிச்சு 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் – அஜித் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்திலும், விஜய் – சூர்யா இருவரும் இணைந்து நேருக்கு நேர், பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களிலும், அஜித் – விக்ரம் இணைந்து உல்லாசம் படத்திலும் நடித்திருக்கின்றனர். ஆனால் இப்போது அதுபோல தற்போதைய ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதும் இல்லை. ஏற்படவும் இல்லை.

இந்த மாதிரியான சூழ்நிலையில், ரஜினி, கமல் ,விஜய், அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்கள் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் குறிப்பாக விஜய்யும் அஜித்தும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அஜித் இது குறித்து பேசியிருக்கிறார். அதில் ரசிகை ஒருவர், விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று அஜித்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அஜித், “முதலில் விஜயின் ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும். என்னுடைய ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும். அதற்கான ஸ்கிரிப்ட் அமைய வேண்டும். அதுபோல அமைந்தால் பண்ணலாம்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஜித், “விஜய்யும் நானும் என்றைக்குமே எதிரிகளாக இருந்தது கிடையாது. ஆனால் கண்டிப்பாக எங்களுக்குள் போட்டி இருக்கிறது. எந்த ஒரு துறையிலுமே கண்டிப்பாக போட்டி இருக்கும் பொறாமை இருக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை அது பாதிக்காமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியமான விஷயம். அடுத்தபடியாக ஒரு படம் ஷூட்டிங் நடக்கும் போது ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கிறது. அதுபோல நான், விஜய், சூர்யா, விக்ரம் எல்லாரும் படம் நடிக்கும் போது நிறைய குடும்பங்களுக்கு வேலை கிடைக்கிறது. அதுவே இரண்டு ஹீரோக்கள் இணைந்து ஒரு படம் பண்ணும் போது அந்த வேலை வாய்ப்புகள் குறைகிறது. அதனால் அது அவசியமே இல்லை” என்று கூறியுள்ளார்.

author avatar
Savitha