தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!
தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தற்பொழுது தமிழகத்தில் மேற்கு திசை காற்று வீசி வருகின்றது. இந்த மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று(செப்டம்பர்9) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதைப் போலவே இன்று முதல் வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமில்லாமல் இன்று(செப்டம்பர்9) மற்றும் நாளை(செப்டம்பர்10) நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று(செப்டம்பர்9) கோவை மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளிலும் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். சென்னையில் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.