Thursday, July 3, 2025
Home Blog Page 3

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அபூபக்கர் சித்திக் – பயங்கரவாத வழக்குகளின் முக்கிய நபர்

  • 1995: சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஹிந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்

  • 1995: நாகூர் தங்கம் மரணத்துக்கு காரணமான பார்சல் வெடிகுண்டு

  • 1999: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் ஒருங்கிணைந்த ஏழு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

  • 2011: மதுரை – எல்.கே. அத்வானி ரத யாத்திரை – பைப் வெடிகுண்டு வழக்கு

  • 2012: வேலூர் – டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை

  • 2013: பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு தாக்குதல்

அபூபக்கர் சித்திக் நாகூரைச் சேர்ந்தவர்.

முகமது அலி – திருநெல்வேலியைச் சேர்ந்தவர்

1999ல் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

கோயம்புத்தூர் காவல்துறையின் பங்கு

காவல்துறைக்கு கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர்கள் பெங்களூருவிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் தகவலை அடையாளம் காண்பதற்காக, மத்திய உளவு அமைப்புகளின் உதவியுடன் ரகசிய கண்காணிப்பு நடத்தியதன் விளைவாக இந்த கைது செய்யப்பட்டது.

அபூபக்கர் சித்திக் மீது தகவல் வழங்கியவர்களுக்கு ₹5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்திருந்தது.

எதிர்கால சதித்திட்டங்கள் அம்பலமாகும்

மூத்த அதிகாரிகள் கூறுவதன்படி, “இந்த இருவரின் கைது தென்னிந்தியாவில் நடக்கும் தீவிரவாத செயல்களின் பின்னணி மற்றும் நெடுங்கால சதித்திட்டங்களை வெளிச்சத்தில் கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான முன்னேற்றம் ஆகும்.”

காவல்துறையின் பெருமை

இத்தகைய பயங்கரவாத நபர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து, நீதியின் முன் ஆஜர்படுத்திய தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் தமிழக காவல்துறையின் செயல்பாடு தேசிய பாதுகாப்புக்கான உறுதியான செயல்பாடுக்கும் இது சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு

திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு

அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருப்புவனத்தில் லாக்அப் மரணம் – நாடு முழுவதும் அதிர்ச்சி

அஜித் குமார் மீது திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட போது, காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர் உயிரிழந்தார். சாத்தான்குளம் சம்பவத்தை நினைவூட்டும் இந்த நிகழ்வு, தமிழக அரசை கடும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நடந்த லாக்கப் மரணத்திற்கு ஸ்டாலின் பேசியதை எடுத்து காட்டி பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் விமர்சிக்க தொடங்கினர்.

போலீசாருக்கு நடவடிக்கை

இது தொடர்பாக சிவகங்கை போலீஸில் பணியாற்றிய 5 போலீசார் – கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 தனிப்படை போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்வரின் ஆலோசனை கூட்டம்

இந்தச் சூழலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசும் போது அவர், “விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

காவல் துறை பணிப்பாய்வு

முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில்:

  • காவல் நிலையங்களில் அரசு மீது நம்பிக்கையுடன் புகார் தரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

  • கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தமிழக அரசு மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில்

அஜித் குமாரின் மரணத்திற்கு பிறகு அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசு வேலை, இழப்பீடு, அதிகாரிகள் நடவடிக்கை என பல பரிமாணங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதே போல் சட்ட ஒழுங்கு பாதுகாப்பும், மக்கள் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதை அரசு உறுதிசெய்கிறது.

“பக்தியின் பெயரில் பகல் வேஷம்!” – பத்திரிகை கார்ட்டூன்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின், “பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசின் ஆன்மீக பணிகளை பாராட்டுகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

32 ஜோடிகளுக்கான இலவச திருமணம்

சென்னையின் ராஜா அண்ணாமலை மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர், ஒரு ஜோடியுக்குத் தலா நான்கு கிராம் தங்க தாலி மற்றும் ₹70,000 மதிப்புள்ள சீர்வரிசை வழங்கினார். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிட அரசு சாதனைகள்

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 3,176 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதுடன், 997 கோவில்களின் 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், 6,000 கோவில்களுக்கு ₹6,000 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள், அதோடு பழமை வாய்ந்த 1,000 கோவில்களுக்கு ₹425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அத்துடன், “அரசின் ஆன்மீக சேவையில் அமைச்சர் சேகர்பாபு ‘புயல் பாபு’ போல சுழன்று வேலை செய்கிறார்” என அவர் பாராட்டினார்.

பத்திரிகை கார்ட்டூன்களுக்கு கடும் விமர்சனம்

“நான் காவடி எடுத்ததும், அமைச்சர்கள் அழகு குத்தியதையும் வைத்து ஒரு வார இதழ் கார்ட்டூன் போட்டிருக்கிறது. அதைப் பார்த்து சிரிப்பு வரவில்லை… பரிதாபமாக இருந்தது. இது பல ஆண்டுகளாக உள்ள வன்மத்தின் வெளிப்பாடு,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

“இப்படிப்பட்ட கார்ட்டூன்கள் எங்களை பாதிக்காது. நம்முடைய ஆன்மீக பணியை உண்மையான பக்தர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலின் கடைசி வார்த்தை…

“என் மீதும், அரசு மீதும் வரும் விமர்சனங்கள் எனக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கின்றன. அதனால்தான் நான் என் பணியை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கிறேன்,” என உறுதியுடன் பேசினார்.

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன் 

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன் 

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு நேரடி சவாலாக மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சென்றுவிட்ட நிலையில் கட்சியை மீண்டும் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், அவர் வரும் ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதனுடன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். இது, கட்சிக்குள் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கை குறைக்கவும் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்ட செய்யப்படும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. இதன் மூலமாக வயதானாலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்பதையும் நிரூபிக்கவே ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

தந்தை மகன் மோதல் உச்சம்

சமீபகாலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் கட்சியை இரண்டு அணிகளாக பிளக்கக்கூடியளவுக்கு வளர்ந்துள்ளது.
அன்புமணி, பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில், “ராமதாஸ் குழந்தை போல் நடக்கிறார். அவரை மூன்று பேர் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் விமர்சித்ததை வைத்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அன்புமணி ராமதாஸ் அவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்தியும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அருளை விமர்சித்துள்ளார். இந்நிலையில் இருவரும் மாவட்டங்களை பிரித்து, தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிகாரத்தின் கோலோச்சும் போர்…

உட்கட்சி விவகாரத்தால் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, மாம்பழம் சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, “நான் தான் கட்சியின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்” என மனு அளித்துள்ளார்.

அதேவேளை, பாஜக மேலிடத்தின் ஆதரவு பெற முயற்சிக்கும் அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து, புதிய நியமனங்கள் மூலம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்.

கும்பகோணம் கூட்டத்திற்கு பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் கூட்டத்தில்,

  • ராமதாஸ்

  • கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி

  • வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி

  • பல்வேறு மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸ் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளார் என கூறப்படுகிறது.

பூம்புகார் மாநாட்டில் அன்புமணி?

அண்மையில் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டை அன்புமணி வழி நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக பூம்புகார் மகளிர் மாநாட்டை அன்புமணியின் பங்கேற்பில்லாமல் சிறப்பாக நடத்த வேண்டும் என ராமதாஸ் தீவிரம் காட்டுகிறார்.

போட்டி கூட்டங்களால் பரபரப்பு

விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில்,

  • ஒரு பக்கம் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

  • அதே நேரத்தில், அன்புமணியின் மூலமாக நியமனமான நிர்வாகிகள் திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

இருவரும் ஒரே நாளில் கூட்டம் நடத்தியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

நாளுக்கு நாள் தந்தை மகனுக்கிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வரும் சூழலில் கட்சியினர் இரு பிரிவாக பிரிந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளதால் கட்சியின் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்குமார் விஷயத்தில் மௌனம் காக்கும் திருமா! வாயை மூடி அமைதி காக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகள்

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதான கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அமைதியாக உள்ளது மக்கள் மாதிரில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருமாவளவனை டார்கெட் செய்த இணையவாசிகள் குருமா என அவரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக சில ஊடகங்கள் செயல்படும். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊடகங்களில் நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி சொல்வதை விட திமுக ஆட்சியின் சிறப்புகளை தான் எப்பவும் பெருமை பேசிக்கொண்டு திரிவார்கள். அந்த அளவுக்கு ஆளும் கட்சிகள் ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்திருக்கும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் லாக் அப் மரண நிகழ்வு நடந்தபோது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். இந்த ஆட்சியை இப்போதே கலைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் பேட்டி கொடுத்தார். வைகோ, தொல்.திருமாவளவன் போன்றோர் அதிமுக கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

அதிலும் குறிப்பாக திருமாவளவன் சாத்தான்குளம் சம்பவத்தை அதிமுக ஆட்சியின் படுகொலை என்று ஊடகங்களில் வர்ணித்தார். தற்போது சிவகங்கை திருபுவனத்தில் அஜித்குமார் லாக் அப் மரணத்திற்கு இதுவரை வாய் திறக்காமல் மெளனமாக உள்ளார். காவல் நிலைய மரணம் என்று இந்த படுகொலை பற்றி கருத்து தெரிவித்த்துள்ளார் திருமாவளவன்.

திமுக கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும், திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் வைகோ மற்றும் திருமா போன்றோர் பதில் பேசாமல் அமைதியாய் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்போதான் 6 சீட்டில் இருந்து 10, 15 சீட் திமுகவிடம் கேட்கலாம்னு இருக்கிறோம், இந்த நேரத்தில் இது போன்ற விஷயங்களுக்கு விமர்சனம் செய்தால் சீட்டு பேரம் பேச முடியாது என்று திருமாவும், வைகோவும் நினைத்துக்கொண்டு அமைதி காப்பதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் இவர்களை கலாய்த்து வருகின்றனர்.

அஜித் குமார் மரணம்: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் – நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக உரிமையாளரின் பரபரப்பு பேட்டி வைரல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் பின்னணியில் உள்ள நகை காணாமற்போன விவகாரம் தொடர்பாக நகையின் உரிமையாளர் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எப்படி நடந்தது?

மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிக்கிதா, தனது வயதான தாயுடன் கோவிலுக்கு வந்தபோது, தாயின் உடல்நிலை காரணமாக தங்க நகைகளை கழற்றி காரில் வைத்துவிட்டு, சாமி தரிசனம் செய்துள்ளார். காரை தற்காலிக காவலாளி அஜித் குமார் நிறுத்தி, சக்கர நாற்காலி கொண்டு வந்ததையும், பின்னர் சாவியை மீண்டும் வழங்கியதையும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

அவர்கள் திரும்பிச் சென்றபின், சிறிது தூரம் சென்றபோது, பையில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. உடனே திருப்புவனம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து , அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை விசாரணையின் போது தாக்கியதாக கூறப்படுகிறது, பின்னர் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரின் தாக்குதல்?

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்த அஜித் குமாரின் உடலில் மொத்தம் 18 இடங்களில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் பதிவாகியுள்ளது. முகம், நெற்றி, புஜம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்ட காயங்களும் இருந்துள்ளன. இது, போலீசாரின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கான விசாரணையை CB-CID மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புகார் அளித்த பெண்ணின் பக்கம் என்ன?

இதனையடுத்து புகாரளித்த பெண் அளித்த பேட்டியில், “நாங்கள் சாமி தரிசனம் செய்து விட்டு காரை கிளம்பினோம். பிறகு நகை இல்லாதது தெரிய வந்தது. நாங்கள் யாரையும் தாக்கவில்லை. போலீசாரிடம் இது குறித்து புகாரே அளித்தோம். FIR போடப்பட்டதா என தெரியவில்லை,” என அந்த பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகாரியின் உறவினரா?

மேலும், நிக்கிதா என்ற பெண் ஒரு IAS அதிகாரியின் நெருங்கிய உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் போலீசார் கடுமையாக விசாரணையை மேற்கொண்டிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த சம்பவம், தமிழகத்தில் காவல்துறையின் நடத்தை மற்றும் விசாரணை முறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடர்கிறது.

நடிகர் விஜய்க்கு குடிப்பழக்கம் இருக்கா? வலைப்பேச்சு அந்தணன் சொன்ன வார்த்தைகளால் கடுப்பான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வருடமே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

திமுக கட்சியை ஆட்சியில் இருந்து துரத்திவிட்டு தமிழக முதல்வராக விஜய் தற்போது முயற்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது ஒரே இலக்கு என்னும் குறிக்கோளை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறார்.

இந்த ஜனநாயகன் தான் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கும் கடைசி படம். இதன்பிறகு முழு நேர அரசியலில் விஜய் இறங்கிவிடுவார். ஜனநாயகன் படத்திற்காக GST வரி சேர்த்து மொத்தம் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதான் இந்திய சினிமாவில் ஒரு நடிகர் வாங்கும் அதிக சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நடிகர் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு மது அருந்தும் பழக்கம் இருக்கா, என்ற கேள்விக்கு விஜய்க்கு இப்போதெல்லாம் மது அருந்தும் பழக்கம் சுத்தமாக இல்லையாம். காரணம் விஜய்க்கு சுகர் ரொம்ப அதிகமா இருக்குதாம். 2 இட்லிக்கு மேல அவரால சாப்பிடவே முடியாதாம்.

அப்படிப்பட்ட மனுஷனாலே எப்படி மது குடிக்க முடியும்? சுகர் பிரச்சனையால் விஜய்க்கு மது அருந்தும் பழக்கம் இப்போது இல்லை என்று பேட்டி கொடுள்ளார் வலைப்பேச்சு அந்தணன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கூலி படத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! 1000 கோடி வசூலில் மண்ணை அள்ளி போட்ட வடக்கன்ஸ்!

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே கிடைக்கும். அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் அந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். ரஜினிகாந்த்க்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது எப்பயுமே அவர் ஜெயிக்கிற குதிரையின் மேல் தான் பந்தயம் கட்டுவார்.

எந்த ஒரு இயக்குனரின் படமும் வெற்றி பெற்று விட்டால் அவரை உடனே அழைத்து அவரை பாராட்டி உங்களிடம் எனக்காக ஏதேனும் புது கதை இருக்கா? சொல்லுங்க நம்ம படம் பண்ணலாம் என்று வெற்றி பெற்ற இயக்குனரை பாராட்டி அவருக்கு வாய்ப்பும் கொடுப்பார். இந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை தான் இயக்கிய எந்த படமும் தோல்வியே அடையாத இயக்குனரான லோகேஷ் கனகராஜை சந்தித்து அவருடன் கமிட்டாகி கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்து விட்டார்.

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமீர்கான்,நாகார்ஜுனா,உபேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றிய அமீர்கானுக்கு லோகேஷின் வேலைகள் மிகவும் பிடித்துப் போகவே லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண அமீர்கான் லோகேஷ் ஒப்பந்தம் செய்து விட்டார். அந்த அளவுக்கு கூலி படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கூலி படம் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்களில் பேசத் தொடங்கி விட்டனர். கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதே நாளில் தான் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் WAR 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Yash Raj பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 14 நாட்கள் வட மாநிலத்தில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாக வேண்டும் என்று Yash Raj பிலிம்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டது.

இதனால் கூலி படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு ஒரு திரையரங்கில் கூட கூலி படம் வெளியாக முடியாத அளவிற்கு Yash Raj பிலிம்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் கூலி படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா, வட மாநிலத்தில் கூலி படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்கிற நிலை தற்போது எழுந்துள்ளது. இதனால் கூலி படக் குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.

உடலை வாங்க மறுத்த அஜித்குமார் குடும்பத்தினர்! பல லட்சம் பணம் தருவதாக சொல்லி பேரம் பேசிய திமுகவினர்?

சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று ஊர் பொதுமக்கள், அஜித் குமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் விஜய், நயினார் நாகேந்திரன், சீமான் போன்ற முன்னணி அரசியல் தலைவர்கள் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அஜித் குமாரை கொலை செய்த அந்த காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அஜித் குமார் ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வேங்கைமாறன், திமுகவை சேர்ந்த மகேந்திரன், திருபுவனம் திமுக நகர செயலாளர் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி போன்றோர் அஜித்குமாரின் குடும்பத்துடன் பேரம் பேசியுள்ளனர்.

உங்களுக்கு 50 லட்சம் பணம் தருகிறோம், வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் அஜித்குமாரின் உடலை வாங்கிவிட்டு சென்று விடுங்கள் என்று பேரம் பேசியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று அஜித்குமாரின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். நீதிமன்றத்தில் கூட திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எங்களிடம் 50 லட்சம் பணம் தருகிறோம் என்று பேரம் பேசினார்கள் என்ற தகவலையும் அஜித்குமார் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் போன்ற தலைவர்கள் இந்த லாக்கப் டெத் குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 முதல் இன்று வரை 24 லாக் அப் டெத் நடந்துள்ளது. உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது தான் இந்த காவல்துறை இந்த நிகழ்வில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் அது சரியாக இருக்காது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வு துறைக்கு வழக்கை மாற்றியதை போல இந்த வழக்கையும் சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வழக்கை போல இந்த வழக்கிலும் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இது போன்ற கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடக்காது என்று முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கு உடனடியாக உறுதியும், உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.

மனிதாபிமானம் அறவே அற்று சாமானியருக்கு அநீதி இழைக்கும் துறையாக காவல்துறை நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் திமுக அரசு இதேபோல தொடர்ந்து செயல்பட்டால் 2026 நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றில் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என விஜய் அறிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த எச்சரிக்கை தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.