சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! 

0
60

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! 

காய்ச்சல் மற்றும் சளி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது மதிப்புள்ள சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு நாய் கடிக்கான ஊசி போட்டதால் அந்த சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தந்தை சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தந்தை கருணாகரன் போலீசில் கூறி இருப்பதாவது,

எனது மகள் சாதனா வயது 13. நான் எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். அங்கு பரிசோதனை செய்த மருத்துவரிடம் எனது மகளுக்கு சளி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறினேன். அதற்கு அவர்கள் ஊசி மற்றும் மருந்து சீட்டினை எழுதி தந்தார்கள். அதில் தரப்பட்ட மாத்திரை வாங்கிக் கொண்டு நான் ஊசி போடும் இடத்திற்கு வந்தேன்.

அங்கே செவிலியரிடம் ஊசி சீட்டினை கொடுக்கும் பொழுது அவர் என்னவென்று கூட பார்க்காமல் எனது மகளுக்கு இரண்டு ஊசிகள் போட்டார். நான் அவரிடம் எதற்காக இரண்டு ஊசி என கேட்டதற்கு நாய் கடித்தால் இரண்டு ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் எனது மகளுக்கு சளி தொல்லை எனக் கூறினேன். உடனே அவர் என்னிடம் மழுப்பலாக பதில் கூறி சமாளிக்க முற்பட்டார்.

இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்படவே அங்குள்ள உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன். எனவே எனது மகளுக்கு அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்த செவிலியர் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.