சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

0
82
#image_title

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி. வயது 14. கலையரசி 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அன்று சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்குச் சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்துச் சாப்பிட்டனர்.

அதன் பிறகு பள்ளி மாணவியான கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தார். அங்கு மாணவிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பள்ளி மாணவியான கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி மற்றும் உறவினர்கள் இருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அதே உணவகத்தில் சவர்மா, சிக்கன் வகைகளை வாங்கி சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாந்தி, வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்த அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு, தமிழக அரசின் சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் எனச் சாடியுள்ளார். மனித உயிர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரத்தைக்  காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான  உரிமையை இழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.